ANTARABANGSA

காஸாவுக்கு மனிதாபிமான உதவி- இஸ்ரேலுடன் கட்டார் ஒப்பந்தம்

இஸ்தான்புல், ஜன 17- காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள்
சென்றடைவதற்கு ஏதுவாக தங்களின் சமரச முயற்சியில் இஸ்ரேல்
மற்றும் ஹமாஸ் தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் காணப்பட்டுள்ளதாகக்
கட்டார் நேற்று கூறியது.

காஸாவிலுள்ள பொது மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்
கிடைப்பதற்கும் அதற்கு பிரதிபலனாக பாலஸ்தீன தரப்பினரால்
சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கும்
இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது என்று அந்நாடு தெரிவித்தது.

கட்டார் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் இந்த
இணக்கம் காணப்பட்டுள்ளதாக கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்
மஜிட் பின் முகமது அல்-அன்சாரியை மேற்கோள் காட்டி அனாடோலு
செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மனிதாபிமான உதவிப் பொருள்கள் இரு கட்டார் ஆயுதப் படை
விமானங்கள் மூலம் இன்று எகிப்திய நகரான எல் அரிஷிக்கு
அனுப்பப்பட்டு அங்கிருந்து காஸா முனைக்கு கொண்டுச் செல்லப்படும்
என்று அல் அன்சாரி கூறினார்.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இந்த போரில் இதுவரை
24,285 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர்
சிறார்கள் மற்றும் பெண்களாவர். மேலும் இபோரில் 61,154 பேர்
காயமடைந்துள்ளனர்.

காஸா மக்களில் 85 விழுக்காட்டினர் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. கூறியது. அவர்கள் கடுமையான உணவு மற்றும் சுத்தமான குடிநீர், மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதோடு அங்கு அடிப்படை வசதிகளும் முற்றாக சீர்குலைந்துள்ளதாக அது தெரிவித்தது.


Pengarang :