ANTARABANGSA

சிறப்பாகச் செயல்படாத நீர் விநியோக நடத்துனர்களின் லைசென்ஸ் மீட்டுக் கொள்ளப் படும்

புத்ரா ஜெயா, ஜன 17- நீர் விநியோகச் சேவை நடத்துனர்கள் நிர்ணயிக்கப்பட்ட அடைவு நிலைக்கான முக்கிய குறியீட்டை (கே.பி.ஐ.) அடையாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) மீட்டுக் கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு நீர் சேவை தொழில்துறை சட்டத்தில் (சட்டம் 655) இந்த ஷரத்து இடம் பெற்றுள்ளதாக எரிசக்தி மற்றும் பொது வசதிகள் துறை துணை அமைச்சர் அக்மால் நசாருல்லா முகமது நாசீர் கூறினார்.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று அமலுக்கு வரவுள்ள நீர் கட்டண மறுசீரமைப்பு காரணமாக நீர் சேவை நடத்துனர்களின் வருமானம் அதிகரிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நீர் விநியோக சேவையை  தரம் உயர்த்துவதற்கான நீர்  சேவை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அந்த வருமானத்தை அந்நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நீர் சேவை நடத்துனர்கள் அடைய வேண்டிய அடைவு நிலைக்கு முக்கிய குறியீட்டு மேம்பாட்டை உறுதி செய்வதும் முக்கிய அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவதும் அடங்கும் என்றார் அவர்.

பழைய குழாய்களை மாற்றுவது மற்றும் புதிய நீர் சுத்திகரிப்பு மையங்களை நிர்மாணிப்பது ஆகியவையும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி தீபகற்ப மலேசியா மற்றும் லபுவானில் வீடுகளுக்கான நீர் கட்டணத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று ஸ்பான்  இன்று அறிவித்தது. இந்த கட்டண உயர்வு ஒரு கன மீட்டருக்கு 22 காசு வரையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது.


Pengarang :