NATIONAL

முதியவரைப் படுகொலை செய்ததாக 17 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஜன 17- இரு வாரங்களுக்கு முன்னர் முதியவர் ஒருவரைப்
படுகொலை செய்ததாக 17 வயது இளைஞன் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி இரவு மணி 11.30க்கும் மறுநாள்
4ஆம் தேதி காலை 10.00 மணிக்கும் இடையே ரந்தாவ், ஜாலான் சீலாவ்,
கம்போங் பாசீர் எனும் இடத்தில் ஜாஹிட் நாகப்பன் (வயது 74) என்பவரைக்
படுகொலை செய்ததாக அவருக்கு எதிரான குற்றப் பத்திரிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் சைட் பாரிட் சைட் அலி முன்னிலையில் இந்த வழக்கு
இன்று விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் வயது குறைந்தவர்
என்பதால் இந்த வழக்கு விசாரணையைக் காண பொது மக்களுக்கு
அனுமதி வழங்கப்படவில்லை.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது மரண தண்டனை
விதிக்கப்படாதப் பட்சத்தில் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
மற்றும் 12 பிரம்படிகள் வரை விதிக்க வகை செய்யும் தண்டனைச்
சட்டத்தின் 302வது பிரிவின் இந்த பதின்ம வயது இளைஞர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், 2001ஆம் ஆண்டுச் சிறார் சட்டத்தின் 97(1)வது பிரிவின் கீழ் 18
வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது
என்பதால் இந்த வழக்கு மாமன்னர் அல்லது மாநில சுல்தான்கள் இசைவு
தெரிவிக்கும் காலம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிரிவுக்கு
மாற்றப்படும்.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் எம்.புஷ்பா இந்த வழக்கை
நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சார்பில் யாரும்
ஆஜராகவில்லை.

சவப்பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கு
விசாரணை எதிர்வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


Pengarang :