ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொது போக்குவரத்தை சீரமைத்து வாகன நெரிசலைக் குறைக்க “கிரேட்டர் கிளாங் வெளி“ முன்னெடுப்பு உதவும்

சுபாங் ஜெயா, ஜன 20- “கிரேட்டர் கிளாங்  வெளி“ என்னும் மகத்தான கிள்ளான் பள்ளத்தாக்கு நிர்வாக நிகழ்ச்சி நிரலில் பொது போக்குவரத்தை மறுசீரமைப்பு செய்வது முதன்மை இலக்காக இருக்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஏதுவாக பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம், கிள்ளான் ஆகிய நகரங்களில் தனியார் வாகன பயன்பாட்டை பொது போக்குவரத்து பயன்பாட்டிற்கு மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.  இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை சிறப்பானதாகவும் மேலும் தரமிக்கதாகவும் உருவாக்க இயலும். அதோடு மட்டுமின்றி திறன்மிக்க மற்றும் உயர் மதிப்பு கொண்ட வேலை வாய்ப்புகளையும் இதன் மூலம் உருவாக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் வாயிலாக சிலாங்கூர் மக்கள் மாநிலத்தின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப நியாயமான ஊதியத்தை பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என அவர் சொன்னார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற சுபாங் ஜெயா மாநகர் மன்ற மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தின் விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான்கு முக்கிய நகரங்களை உள்ளடக்கிய மகத்தான கிள்ளான் பள்ளத்தாக்கு திட்டத்தை உருவாக்க இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம்  வெள்ளி ஒதுக்கப் பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :