SELANGOR

ஏஹ்சான் ரஹ்மா திட்டத்தில் இவ்வாண்டு கூடுதல் பொருட்கள் அறிமுகம்- வெ.6 கோடி விற்பனையைப் பதிவு செய்யத் திட்டம்

கோல லங்காட், ஜன 22- ஏஹ்சான் ரஹ்மா விற்பனையில் கூடுதல் பொருட்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக இவ்வாண்டு 6 கோடி வெள்ளி வர்த்தகத்தைப் பதிவு செய்ய சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பி.கே.பி.எஸ்.) இலக்கு நிர்ணயித்துள்ளது.

மக்களின் சுமையைக் குறைப்பதற்காக மாநில அரசு வழங்கி வரும் ஒரு கோடி வெள்ளி மானியமும் இந்த இதில் அடங்கும் என்று பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது  ராஸி கூறினார்.

கடந்தாண்டு மாநில அரசு வழங்கிய உதவித் தொகையுடன் சேர்த்து 4 கோடியே 85 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வர்த்தகத்தை நாங்கள் பதிவு செய்தோம். இவ்வாண்டு கூடுதல் பொருட்களை அறிமுகம் செய்வதன் மூலம் 6 கோடி வெள்ளி வருமானத்தை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.

அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஏதுவாக லோரிகளின்  எண்ணிக்கையை கட்டங் கட்டமாக உயர்த்த பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது. இந்த ஏஹ்சான் ரஹ்மா திட்டத்தைத் தொடர்வதில் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு வழங்கி வரும் ஆதரவையும் நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

பி.கே.பி.எஸ். ஏற்பாட்டில் கோல லங்காட் செலாத்தானில் வர்த்தக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட தானிய சோள பயிரீட்டின் முதலாவது அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டjf பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று இங்கு நடைபெற்ற இந்த நிகழ்வை விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் தொடக்கி வைத்தார்.

மாநில அரசின்  இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

Pengarang :