ANTARABANGSA

காஸா போர் 108வது நாளை எட்டியது- 18,500 சிறார்கள், பெண்கள் மரணம்

இஸ்தான்புல், ஜன 23 – இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தொடங்கி 108 நாட்கள் ஆன நிலையில் காஸா பகுதியில் 11,000 சிறார்கள் மற்றும் 7,500 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா அரசாங்க ஊடக அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் 7,000 பேர் அல்லது 70 சதவீதம் பெண்கள் மற்றும் சிறார்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டுள்ளனர் அல்லது இஸ்ரேலிய தாக்குதல்களில் காணாமல் போயுள்ளனர் என்று காஸா ஊடகத்தை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி கூறியது.

கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி மோதல் தொடங்கியதிலிருந்து 63,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பிரேதங்களின் எண்ணிக்கை 25,900 ஐத் தாண்டியுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை சுமார் 70,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 290,000 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

சுகாதாரப் பாதுகாப்புத் துறை மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 337 சுகாதாரப் பணியாளர்களும் 45 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாகத் காஸா ஊடகம் தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில், காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் 119 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டனர்.

இது தவிர, இஸ்ரேலியப் படைகள் 99 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 10 பத்திரிகையாளர்களை தடுத்து வைத்துள்ளன. அதே நேரத்தில் காஸா பகுதியில் இருபது லட்சம் குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த மோதல் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் 140 அரசாங்க வசதிகளையும் 99 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் அழித்துள்ளதுடன் 295 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது


Pengarang :