MEDIA STATEMENTNATIONAL

தீவிபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஆடவர் தன்னுயிரைப் பறிகொடுத்தார்

லபுவான், ஜன 25- தனது அண்டை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிக் கொண்ட ஏழு குடும்ப உறுப்பினர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய ஆடவர் அதிகப் புகையைச் சுவாசித்த காரணத்தால் தன்னுயிரைப் பறிகொடுத்தார். இத்துயரச் சம்பவம் இங்குள்ள தாமான் மெரிண்டிங்கில் இன்று விடியற்காலை நிகழ்ந்தது.

தீஜூவாலைக்குள் சிக்கிக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட எழுவரை ஏணியைப் பயன்படுத்தி காப்பாற்றிய கில்லியன் டோனால்டு (வயது 41) திடீரென  மயங்கி விழுந்தார்.

கொளுந்து விட்டெரிந்த வீட்டிலில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் முயற்சியின் போது அந்த ஆடவர் அதிகப்படியான புகையை சுவாசித்திருக்கக் கூடும் என நம்பப்படுவதாக லவுவான் மாவட்ட  போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹமிஸி ஹலிம் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அந்த ஆடவர் லவுவான் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

விடியற்காலை 4.00 மணியளவில் இத்தீச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறிய ஹலிமி, குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்டத் தீ வீட்டிற்கு பரவியது என்றார்.

இதனிடையே , இந்த தீவிபத்து தொடர்பில் அதிகாலை 4.06 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றத்தைத் தொடர்ந்து லபுவான் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


Pengarang :