ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்துமலை தேவஸ்தானத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு  ஆதரவு வழங்கப்படும்! அமைச்சர் கோபிந்த் சிங்  அறிவிப்பு

பத்துமலை ஜன 25-   பத்துமலை திருத்தலத்தில் மேற்கொள்ளப்படும மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

நாடு தழுவிய நிலையில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக லட்சக்கணக்கான மக்கள் பத்துமலையில் கூடி தைப்பூச விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இவ்வேளையில் அனைத்து இந்து மக்களுக்கும் தைப்பூச விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நாட்டில் வாழும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் இந்திய சமுதாயத்திற்கு பெரும் பயனாக இருக்கும்.
மேலும் பத்துமலையில்  மின் படிக்கட்டு , கலாச்சார மண்டபம் கட்டுவது தொடர்பாக பல கோரிக்கைகளை தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இன்று முன்வைத்தார்.

இந்த கோரிக்கைகளை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்வேன். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பிரதமரிடம் கூறியுள்ளேன். இத்திட்டங்களுக்கு அரசு முழு ஆதரவு தரும் என பிரதமர் கூறினார்.

ஆகவே தேவஸ்தானத்தின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

மலைக்கோயிலில் உள்ள முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு 272 படிக்கட்டுகளில்  ஏறுவதற்கு  பதிலாக அங்கு மின்படிக்கட்டுகளை தேவஸ்தானம் அமைக்கும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா முன்னதாகக் கூறியிருந்தார்.

இந்த மின்படிக்கட்டுத் திட்டம் தைப்பூசம் முடிந்தவுடன் தொடங்கப்படும் எனக் கூறிய அவர், சுமார் மூன்றரை கோடி வெள்ளி செலவில் பல்நோக்கு மண்டபம் அமைப்பது மற்றொருத் திட்டமாகும் என்றார்.


Pengarang :