MEDIA STATEMENTNATIONAL

லோரியை 100 கிலோ மீட்டர் துரத்திய போலீசார்- சந்தேக நபர் கைது, இருவர் தப்பியோட்டம்

டுங்குன், ஜன 26- சந்தேக நபர்கள் பயணம் செய்த லோரியை போலீசார் சுமார் 100 கிலோ மீட்டர் துரத்திச் சென்று மடக்கினர். இந்த அதிரடி நடவடிக்கையில் சந்தேக நபர் ஒருவன் கைது செய்யப்பட்ட வேளையில் அவனது இரு சகாக்கள் தப்பினர்.

அந்த மூவரும் பயணம் செய்த இஸூசு ரக லோரியை நேற்று விடியற்காலை 4.00 மணியளவில் பாக்கா, கம்போங் சந்தோங் பகுதியில் கண்ட போலீசார்  சந்தேகத்தின் பேரில் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டதாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் காடீர் கூறினார்.

சோதனை செய்யும் பொருட்டு லோரியை நிறுத்தும்படி அதன் ஓட்டுநருக்கு உத்தரவிடப்பட்டது. எனினும்  அந்த உத்தரவை மீறி வேகமெடுத்த அந்த லோரி பாக்கா டோல் சாவடியின் தடுப்பு கம்பத்தை உடைத்துக் கொண்டு கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2ஐ நோக்கி செல்லத் தொடங்கியது. 

கோல திரங்கானு நோக்கிச் சென்ற அவர்கள் பின்னர் அஜால் டோல் சாவடி வழியாக ஜெராங்காவ்-ஜபோர் சாலையில் மீண்டும் டுங்குன் நோக்கிப் பறந்தனர்.

தப்பியோடும் முயற்சியாக எல்.டி.பி. நெஞ்சாலையின் மற்றொரு டோல் சாவடியையும் ஜெராங்காவில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பையும்  மோதித் தள்ளிய அவர்கள் டுங்குன் நகர் நோக்கிச் சென்றனர் என்று அவர் சொன்னார்.

நிபோங் ஆற்றுப் பாலத்தின் அருகே லோரியை நிறுத்திய 30 வயது மதிக்கத்தக்க அம்மூவரும்  அதிலிருந்து இறங்கி தப்பியோட முயன்றனர். எனினும் அவ்வாடவர்களில் ஒருவன் அதிகாலை 6.55 மணியளவில் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டான் என்று அப்துல் காடீர் சொன்னார்.

அந்த லோரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டெலிகோம் மலேசியா நிறுவனத்திற்கு சொந்தமான 44.2 மீட்டர் கேபிள் கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :