ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பந்திங் மருத்துவமனையில் சேவை மேம்படுத்தப்படுகிறது

ஷா ஆலம், ஜனவரி 27: பந்திங்கில் வசிப்பவர்கள் சிறந்த சுகாதார வசதிகளை அனுபவிக்க அரசாங்கம் RM 359 மில்லியன் ஒதுக்கீட்டில் பந்திங் மருத்துவமனையை மேம்படுத்துகிறது.

இதற்கான கட்டுமானப் பணியை தொடங்க அனைத்து பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக பந்திங் சட்டமன்ற உறுப்பினர்  வி.பாப்பா ராய்டு தெரிவித்தார்.

“ஆம், இதுவரை அனைத்து தரப்பினருடனும்   அவ்வப்போது கலந்துரையாடி வருகிறோம். இது ஒரு முக்கியமான திட்டம் என்பதால் இந்தத் திட்டம் சீராக இயங்குவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.

“குடியிருப்பாளர்களுக்கு நீண்ட காலமாக ஒரு புதிய மருத்துவமனையின் தேவை  உள்ளது. அந்த பகுதி மக்கள் தொகைக்கு ஏற்ப  அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தற்போது உள்ள மருத்துவமனையில் வசதிகள்  விரைவாக  மேம்படுத்த வேண்டும்.   நோயாளிகளின்  எண்ணிக்கை உச்சத்தை அடைந்து விட்டதால் இனி இடமளிக்க  இயலாத நிலை உள்ளதாக,”  அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பந்திங் மருத்துவமனை 1974 இல் 10 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படத் தொடங்கியது மற்றும் கோலா லங்காட்டில் 300,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் சிகிச்சைக்கு 151 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

2019 ஆம் ஆண்டில், அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள எண்டோஸ்கோபி அறையை மேம்படுத்துதல், மயக்கவியல் துறை, தீவிர சிகிச்சை பிரிவு (ICU) மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவற்றில் மேற்கூரையை மாற்றியமைத்தல் ஆகியவற்றிற்காக பந்திங் மருத்துவமனைக்கு அரசு ஒதுக்கீடு செய்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஃபேஸ்புக் மூலம் பந்திங் மருத்துவமனை, சர்வே வரைபடங்கள் தயாரித்தல், மண் பரிசோதனை மற்றும் பயன்பாட்டு மேப்பிங் ஆகியவற்றை உள்ளடக்கிய மேம்படுத்தலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவித்தது.

“நோயாளிகளுக்கான சுகாதார சேவைகள் சிறந்த மட்டத்தில் இருக்கும் வகையில் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை  அங்குள்ள  ஆபத்து\ அவசர  அழைப்புகள் சமாளிப்பது  குறித்து ஆலோசிக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :