MEDIA STATEMENTNATIONAL

 அல்-சுல்தான் அப்துல்லாவின் நீதி மற்றும் விவேகத்தை மக்கள் உணர்ந்தனர்- பிரதமர் பாராட்டு

கோலாலம்பூர், ஜன 28- தனது ஆட்சிக் காலத்தில் அமைதி மற்றும் சுபிட்சத்தை அனைத்து மக்களும் அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கடைபிடித்த நீதி மற்றும் விவேகத் திறனை உணர்வதற்குரிய வாய்ப்பினை அனைத்து மக்களும் பெற்றிருப்பர் எனத் தாம் நம்புவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்கள் நலன் காக்கும் விஷயத்தில் மாட்சிமை தங்கிய பேரரசரும் ராஜா பெர்மைசூரி துவாங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் காட்டிய அக்கறை மன்னருக்கும் மக்களுக்கும் இடையிலான வழக்கமான எல்லைகளைத் தாண்டியதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நீடித்து வந்த நிச்சயமற்ற அரசியல் சூழல், கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம், பொருளாதார பாதிப்பு ஆகியவை காரணமாக நாடு நிச்சயமற்ற மற்றும் பொருளாதார தாக்கத்தை எதிர்நோக்கியிருந்த காலக்கட்டத்தில் மாமன்னர் அரியணை அமைந்தார்.

எனினும், மக்கள்மயப் பண்புகள், எந்த சூழ்நிலையிலும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை காரணமாக ஆட்சி காலத்தில் தனக்கு உரிய பணிகளை மாமன்னர் முழுமையாக நிறைவேற்றினார் எனவும் அன்வார் சொன்னார்.

நாட்டின் 16வது மாமன்னர் பதவி முடிவுக்கு வருவதை முன்னிட்டு இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற அரச விருந்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

தனது ஆட்சிக் காலத்தின் போது மாட்சிமை தங்கிய பேரரசர் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்ததோடு மூன்று முறை பிரதமர் மாற்றம் ஏற்பட்ட போது சிறப்பான முறையில் அப்பிரச்சனைகளைக் கையாண்டு நாட்டை சரியான தடம் நோக்கி வழி நடத்தினார் எனவும் அவர் புகழாரம் சூட்டினார்.


Pengarang :