ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோம்பாக் மக்கள் பரிவு தினத்தில் 5,000 பேர் பங்கேற்பு

கோம்பாக், ஜன 28-  இன்று இங்கு நடைபெற்ற  2024 கோம்பாக்   நாடாளுமன்ற குடிமக்கள் பரிவு தினம் மற்றும் தொழில் முனைவோர் மற்றும் கலாச்சார விழாவில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கம்போங்  மிலாயு வீரா டாமாய் சமூக மண்டபத்தில் காலை 8 மணி முதல் நடைபெற்ற  இந்நிகழ்வில் கால்பந்து போட்டி மற்றும்  அரசு துறைகளின் கண்காட்சி முகப்பிடங்கள்  உட்பட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன.

கோம்பாக் நாடாளுமன்ற மக்கள் பரிவு தினம் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாங்கள் ஒவ்வொரு மாதமும் இந்த நிகழ்வை  ஏற்பாடு செய்கிறோம்.  கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில்   மூன்று மாநில சட்டமன்றங்கள் உள்ளன. தொழில்முனைவோர் மற்றும் கலாச்சாரம் என்ற கருப்பொருளுடன் இங்குள்ள மக்களைக் கொண்டாடும் வகையில் சுங்கை துவா மாநில சட்டமன்றத்தில்  நடைபெறும்  நிகழ்வு  சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது என்று  அவர் தெரிவித்தார்.

மக்களை  நேருக்கு நேர் சந்திக்கவும் நட்பாக பழகவும்  பல்வேறு அரசு நிறுவனங்களின் திட்டங்களில் பதிவு செய்யவும்   இந்த திட்டம் உதவுகிறது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில்  மந்திரி பெசாரின்  அரசியல் செயலாளர் ரஹீம் கஸ்தி, சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) தலைமைச் செயல் முறை அதிகாரி நோரித்தா முகமது சீடெக், சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக குழுமத்தின் (பிகேபிஎஸ்) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமட் ராஸி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதன்மை தரவுத் தளம் (பாடு), சிலாங்கூர் குழந்தைகள் வாரிசான் அறக்கட்டளை (யாவாஸ்), செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்),  மற்றும் ஊழியர் சேம நிதி வாரியம்  ஆகியவை தங்கள் முகப்பிடங்களை இங்கு திறந்திருந்தன. மேலும் இலவச மருத்துவ முகாமும் இங்கு நடைபெற்றது.


Pengarang :