ஷா ஆலம், பிப் 1: கடந்த செவ்வாய்க்கிழமை, ஷா ஆலம் மருத்துவமனையின் பின்புற கதவுக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் காரில் விடப்பட்டதாக நம்பப்படும் ஐந்து வயது சிறுமி இறந்தார்.

அதே நாளில் இரவு 8.01 மணிக்கு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை அவரது தரப்பு பெற்றதாக ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

“குழந்தையின் 34 வயதான தாய், மருத்துவமனையில் ஊழியர் ஆவார். மாலை 6 மணியளவில் அவரது கணவரால் தொடர்பு கொண்ட பிறகுதான் இச்சம்பவம் குறித்து அறிந்தார்.

“பாதிக்கப்பட்ட சிறுமி பின்னர் சுயநினைவற்ற நிலையில் ஷா ஆலம் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட பின்னர் இருந்தது உறுதி செய்யப்பட்டது” என்று முகமட் இக்பால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனை நேற்று பிற்பகல் 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாகவும், மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும், இன்னும் ஆய்வக பகுப்பாய்விற்கு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 2 மணியளவில் அருகிலுள்ள நர்சரியிலிருந்து அழைத்து வரப்பட்ட பின்னர், அச்சிறுமியை அவரது தாயார் தற்செயலாகக் காரில் விட்டுச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று முகமட் இக்பால் கூறினார்.

குழந்தைகள் சட்டப் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஏதேனும் தகவல் தெரிந்தால், 013-6544996 என்ற எண்ணில் இன்ஸ்பெக்டர் சையர் எய்டிடைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா