NATIONAL

திரங்கானு மாநிலத்தில் 463 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தொடர்ந்து அடைக்கலம்

கோல திரங்கானு, பிப் 1- திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று
காலை 8.00 மணி நிலவரப்படி டுங்குன் மாவட்டத்திலுள்ள இரு துயர்
துடைப்பு மையங்களில் 149 குடும்பங்களைச் சேர்ந்த 463 பேர் அடைக்கலம்
நாடியுள்ளனர்.

கம்போங் பாசீர் ராஜாவிலுள்ள துயர் துடைப்பு மையத்தில் 88
குடும்பங்களைச் சேர்ந்த 237 பேரும் கம்போங் சுக்கோர் சமூக
மண்டபத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 226 பேரும் தங்கியுள்ளதாகத்
திரங்கானு மாநிலப் பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

வெள்ளம் முழுமையாக வடிந்து வானிலையும் தெளிவாக இருந்த
போதிலும் வீடுகள் மற்றும் பொருள்களை துப்புரவு செய்யும் பணிகளை
மேற்கொள்ளும் காரணத்தால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளதாக மலேசிய பொது தற்காப்பு படையின்
(ஏ.பி.எம்.) திரங்கானு மாநில இயக்குநர் லெப்டிணன்ட் கர்னல் முகமது
ரோஸ்மான் அப்துல்லா கூறினார்.

வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் அவர்களில் பலர் இன்னும் ஈடுபட்டு
வருகின்றனர். எனினும், அவர்கள் இன்று தொடங்கி கட்டங் கட்டமாக வீடு
திரும்பவுள்ளனர் என்றார் அவர்.

எதிர்வரும் சனிக்கிழமைக்குள் இவ்விரு துயர் துடைப்பு மையங்களும்
மூடப்படும் என அவர் சொன்னார்.


Pengarang :