NATIONAL

கோல லிப்பிஸ், செண்டருட் தேசியப் பள்ளிக் கட்டிடம் தீ விபத்தில் அழிந்தது

குவாந்தான், பிப் 1 –  கோல லிப்பிஸ், போஸ் செண்டருட்டில் உள்ள செண்டருட் தேசியப் பள்ளியின் கட்டிடத் தொகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் அக்கட்டிடம் முற்றிலும் சேதமடைந்ததாகக் கூறிய பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பொது உறவு அதிகாரி ஜூல்ஃபாட்லி ஜக்காரியா, எனினும், இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றார்.

இத்தீவிபத்து தொடர்பில்  நேற்றிரவு 10.29 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தீயணைப்புக் குழு அங்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அப்பள்ளி அமைந்துள்ள இடத்தை நான்கு சக்கர இயக்க  வாகனம் மூலம்  மட்டுமே அடைய முடியும் என்பதால் சம்பவ இடத்தைச் சென்றடைய தங்களுக்கு மூன்று மணி நேரம் 17 நிமிடங்கள் பிடித்தன என்றார் அவர்.

இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3.23 மணிக்குத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும்,  அதிகாலை 4.53 மணிக்குத் தீயணைப்புப் பணி முழுமையாக முற்றுப் பெற்றது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தீ விபத்து நடந்த பள்ளியிலிருந்து  இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோல லிப்பிஸ், சுங்கை கோயான் தீயணைப்பு நிலையத்திலிருந்தும்  70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரவுப் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.


Pengarang :