SELANGOR

தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சந்தையை விரிவுபடுத்துவீர்- தொழில் முனைவோருக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், பிப் 1- உள்நாட்டு தொழில்முனைவோர் புதிய வாய்ப்புகளைக்
கண்டறிந்து விரிவான சந்தையை கொண்டுள்ள தென்கிழக்காசியா வரை
தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த பிராந்தியம் அதிக அளவிலான மக்கள் தொகையை அதாவது சுமார்
60 கோடி பேரைக் கொண்டுள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும்
அந்தந்த பகுதிகளின் தொழிலியல் தேவை ஆகியவற்றின் அடிப்படையில்
வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக
அவர் சொன்னார்.

தொழில்முனைவோர்களே, நமது வர்த்தகச் சிந்தனைகளை நமது
சுற்றுச்சூழலுக்கேற்ப குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுத்துக் கொள்ள
முடியாது. மாறாக, வட்டார மற்றும் உலகலாவிய நிலையில்
போட்டியிடுவதற்கான தைரியத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தென்கிழக்காசியாவில் 60 கோடி பேர் உள்ளனர். அதிலும் குறிப்பாக
இந்தோனேசியா 20 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது என்று
அவர் தெரிவித்தார்.

சில தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை அமெரிக்கா, இந்தியா
போன்ற நாடுகளுக்கு விரிவுபடுத்த முனைகின்றனர். அதே சமயம்
ஆசியான் 60 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும். இது
தனக்கே உரிய சந்தையைக் கொண்டுள்ளது என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.என்.எஸ்.) சிறந்த தொழில் முனைவோர் விருதளிப்பு நிகழ்வுக்கு
தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

இந்த விருதளிப்பு நிகழ்வில் இளைஞர், விளையாட்டு மற்றும்
தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்

முகமது நஜ்வான் ஹலிமி, பி.கே.என்.எஸ். தலைமை நிர்வாக அதிகாரி
டத்தோ முகமது அபாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :