SELANGOR

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம்: பக்கத்தான்- பாரிசான் கொள்கையளவில் இணக்கம்

ஷா ஆலம், பிப் 2-  சிலாங்கூர் மாநிலத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் இடங்களை ஒதுக்குவது தொடர்பில் மாநில பக்காத்தான் ஹராப்பானும்  பாரிசான் நேஷனலும்  (தேசிய முன்னணி) கொள்கையளவில்  உடன்பாடு கண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தேசிய முன்னணி முனவைத்த பல பரிந்துரைகள் தற்போது பரிசீலனையில் இருந்தாலும் அந்த கூட்டணி எழுப்பிய ஆதங்கங்களுக்கு  சமீபத்திய கூட்டத்தில் தீர்வு காணப்பட்டன என்று   அவர் கூறியதாக ஃப்ரி மலேசியா டுடே இணைய ஊடகம் கூறியுள்ளது.

நாங்கள் அந்த பரிந்துரைகளை இறுதி செய்ய வேண்டியுள்ளது. மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ இந்த விஷயத்தை முடித்துவிடலாம் என்று நம்புகிறேன். குறைந்த பட்சம் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக முடிவு காணப்படும்  என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூரில் உள்ள பெவிலியன் புக்கிட் ஜாலில் பேரங்காடியில்  நேற்று தொடங்கிய நான்கு நாள் சீனப் புத்தாண்டு பாலேக் கம்போங் கலாச்சார விழாவில் கலந்து கொண்டப் பின்னர்  சிலாங்கூர் ஹராப்பான் தலைவருமான அவர்  செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை இறுதி செய்ய மாநில தேசிய முன்னணித் தலைவர் டத்தோ மெகாட் ஜூல்கர்னைன் ஓமர்டினுடன் தமது  அலுவலகம் விரைவில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும் என்று அமிருடின் மேலும் கூறினார்.

இருப்பினும், ஊராட்சி மன்றங்கள் சுமூகமாக இயங்குவதை உறுதிப்படுத்துவதற்காகத் தற்போதைய நியமனங்கள் அனைத்தும் தொடரும் என்றார் அவர்.

தற்போது காலியாக உள்ள 20 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகள் இன்னும் தேசிய முன்னணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன உள்ளன ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  டத்தோ இங் சுயி லிம் முன்னதாகக் கூறியிருந்தார்.

அம்னோ தலைமையிலான கூட்டணி, மாநில அரசாங்கம் வழங்கிய கவுனசிலர் நியமனம் தொடர்பான  ஆரம்ப சலுகையை நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூரில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களில்  2024-2025 தவணைக்குக் கவுன்சிலர்களை நியமனம் செய்யாத ஒரே ஊராட்சி மன்றமாக  கிள்ளான் மாநகர் மன்றம்  உள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள மொத்தம் 12 ஊராட்சி மன்றங்களில்  288 கவுன்சிலர் பதவிகள் உள்ளன.


Pengarang :