SELANGOR

கிள்ளான் அரச மாநகராக இன்று அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம்

கிள்ளான், பிப் 5 – சுறுசுறுப்புமிக்க துறைமுக நகரான கிள்ளானை அரச
மாநகராக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று அதிகாரப்பூர்வமாகப்
பிரகடனப்படுத்தினார்.

கிள்ளான் நகராண்மைக் கழகம் (முன்பு எம்.பி.கே. என அழைக்கப்பட்டது)
இனி கிள்ளான் அரச மாநகர் மன்றமாக அல்லது எம்.பி.டி.கே. வாக
அந்தஸ்து பெறுவதாக இங்கு நடைபெற்ற பிரகடன நிகழ்வில் அவர்
அறிவித்தார்.

“கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.) 2023 நவம்பர் 23ஆம் தேதி
தொடங்கி இனி வரும் காலங்களுக்கு மாநகராக நீடித்திருக்கும் என்பதை
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவாகிய நான் அறிவிக்கிறேன். இனி
கிள்ளான் அரச மாநகர் மன்றம் என்றே அழைக்கப்பட வேண்டும்“ என
அவர் இங்குள்ள விண்ட்ஹாம் ஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில்
குறிப்பிட்டார்.

இதன் வழி சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது அரச மாநகராகவும்
அலோர்ஸ்டார் மற்றும் ஜோகூர் பாருவுக்கு அடுத்து மூன்றாவது அரச
மாநகராகவும் கிள்ளான் விளங்குகிறது.

கிள்ளான் அரச மாநகராகப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து டத்தின்
படுகா நோராய்னி ரோஸ்லான் இந்த மாநகரின் முதலாவது டத்தோ
பண்டாராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

கிள்ளான் மாநகரின் முதலாவது டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்ட
நோராய்னிக்கு தமதுரையில் வாழ்த்து தெரிவித்துக் கொண்ட மேன்மை
தங்கிய சுல்தான், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் மாநகர் மன்ற
உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :