SELANGOR

வாழ்க்கைச் சுமையைக் குறைக்க சிலாங்கூர் மக்களுக்கு அதிக ரொக்க உதவிகள்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், பிப் 9- வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக மாநில
மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து திருமணமாகாதவர்களும்
திருமணமாகி குடும்பத்தைக் கொண்டிருப்பவர்களும் பல்வேறு ரொக்க
உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

மத்திய அரசினால் 100 கோடி வெள்ளி நிதியில் அமல்படுத்தப்பட்டுள்ள
ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் (எஸ்.டி.ஆர்.) மற்றும் 30 கோடி வெள்ளி
நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு மேற்கொண்டு வரும் சிலாங்கூர் நல்வாழ்வு
உதவித் திட்டம் (பிங்காஸ்) ஆகியவையும் அதில் அடங்கும் என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவை தவிர இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டத்தின்
கீழ் மேலும் பல வகையான உதவிகளை மக்கள் பெற முடியும் என்று
அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில மக்கள் என்ற அகப்பக்கத்திற்குச் சென்று மாநில
அரசினால் அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூக நலத் திட்டங்களை
அறிந்து கொள்ளலாம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியப் பின்னர் மாநில அரசு
சிலாங்கூர் மக்கள்மயப் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் ஏழு சமூக நலத்
திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

கடந்த 2017ஆம் ஆண்டில் பெடுலி ராக்யாட் முன்னெடுப்பின் கீழ் அந்த
திட்டங்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரிக்கப்பட்டன. கடந்த 2019ஆம்
ஆண்டு அத்திட்டங்கள் யாவும் சீரமைக்கப்பட்டு 33 திட்டங்களாக ஆயின.

தற்போது ஐ.எஸ்.பி. திட்டத்தின் கீழ் 60 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில்
46 மக்கள் நலத் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.


Pengarang :