MEDIA STATEMENTNATIONAL

துப்புரவுப் பணியாளரை மிரட்டிப் பணம் பறித்தச் சம்பவம்- மேலும் இரு போலீஸ்காரர்கள் கைது

ஜோகூர் பாரு, பிப் 11- பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்தச் சம்பவம் தொடர்பில் ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மேலும் இரு போலீஸ்காரர்கள் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான 29 மற்றும் 36 வயதுடைய அவ்விரு போலீஸ்காரர்களும் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில  போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.

எனினும், இந்த புகார் தொடர்பில் ஏற்கனவே கைதான ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் எழு உறுப்பினர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக செய்யப்பட்ட புகார் தொடர்பில் ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் எழு உறுப்பினர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

போதைப் பொருள் வழக்கு தொடர்பில் கைதான தன் தம்பியை விடுவிப்பதற்கு பெண் துப்புரவுப் பணியாளரிடம் போலீஸ்காரர் ஒருவர் 40,000 வெள்ளியைக் கோரியதாகச் செய்யப்பட்ட புகார் தொடர்பில் அப்போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதாக முன்னதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

அந்தப் பெண் 35,000 வெள்ளித் தொகையை ஒப்படைப்பதற்காக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வந்ததாகவும், பணம் கொடுத்த பிறகும் தன் தம்பி விடுவிக்கப்படாததைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தாகவும் கூறப்படுகிறது.


Pengarang :