MEDIA STATEMENTNATIONAL

 குழந்தை துன்புறுத்தல் தொடர்பில் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த இருவர் கைது 

கோலாலம்பூர், பிப் 11- செமினியில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் கடந்த மாதம் ஒரு குழந்தையை சித்திரவதை செய்ததோடு அதனை பராமரிக்காமல் கைவிட்ட குற்றசாட்டின் பேரில் இரு பெண் பராமரிப்பாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தன் குழந்தையின் நெற்றியில் வீக்கம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி அந்த 11 மாதக் குழந்தையின் தாயார் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து 29ஆம் தேதி 22 வயதுடைய அவ்விரு பெண்களையும் தாங்கள் கைது செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜாயிட் ஹசான் கூறினார்.

அந்த பராமரிப்பு மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவைச் சோதனையிட்ட போது அந்த பெண் குழந்தை சிறார்களுக்கான நாற்காலியிலிருந்து  தவறி விழுந்தது தெரிய வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அக்குழந்தையை அவரின் தாயார் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அந்த பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வந்ததாகக் கூறிய அவர், அக்குழந்தை மீது  மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அதன் நெற்றி திசுக்களில் மெல்லிய காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றார்.

அவ்விரு பெண்களிடம் நடத்தப் பட்டச் சோதனையில் அவர்களுக்கு முந்தையக் குற்றப்பதிவுகளோ போதைப் பழக்கமோ இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த சம்பவம் தொடர்பில் 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :