NATIONAL

அவமதிக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பினார்- முன்னாள் எம்.பி மாணிக்கவாசகத்திற்கு அபராதம்

ஷா ஆலம், பிப் 13 – அவமதிக்கும் வகையிலான குறுஞ்செய்தியை
ஒருவருக்கு அனுப்பிய குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் காப்பார்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகத்திற்கு இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 வெள்ளி அபராதம் விதித்தது.

மாஜிஸ்திரேட் சாஷா டியானா சப்து முன்னிலையில் தமக்கெதிராக
கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 59 வயதான மாணிக்கவாசகம் ஒப்புக்
கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் இந்த தண்டனையை விதித்தார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று தினங்களுக்கு
சிறைத்தண்டனை விதிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படும் அளவுக்குக் கோபம்
உண்டாக்கும் நோக்கில் அவமதிக்கும் வகையிலான செய்தியை
மாணிக்கவாசம் அனுப்பியதாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில்
கூறப்பட்டுள்ளது.

சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாலை
3.27 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளி
என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 100 வெள்ளி அபராதம் விதிக்க
வகை செய்யும் 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 14வது பிரிவின்
கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

அரசுத் தரப்பு சார்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் அனுவார் அதிரா
அம்ரான் வழக்கை நடத்தினார். மாணிக்கவாசகம் சார்பில் யாரும்
ஆஜராகவில்லை.


Pengarang :