NATIONAL

எல்நினோவால் பயிர்கள் மற்றும் உள்ளூர் உணவு விநியோக ஆதாரங்கள் பாதிக்கப்படவில்லை

ஷா ஆலாம், பிப் 13: நாடு வெப்ப காலநிலை மற்றும் எல் நினோ நிகழ்வை எதிர்கொண்டாலும் பயிர்களின் நிலை மற்றும் உள்ளூர் உணவு விநியோக ஆதாரங்கள் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு உறுதியளித்துள்ளார்.

அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொள்ளப் படுவதாகவும், அதே நேரத்தில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் குறிப்பாக வயலில் பணிபுரியும் போது சிறந்த சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“இந்த வெப்ப வானிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கும். மேலும் சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) உட்பட அதிகாரிகளின் அனைத்து அறிவுறுத்தல்களுக்கு விவசாயிகள் கீழ்ப்படிய வேண்டும்,” என்று அவர் செக்‌ஷன் 27 உள்ள கெரோபோக் ஹவுஸ் & இண்டஸ்ட்ரிக்கு வருகை புரிந்த போது கூறினார்.

அதே நேரத்தில், எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள நாட்டின் தயார் நிலை குறித்து விவாதிக்க அடுத்த வாரம் இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சகத்துடன் தனது அமைச்சகம் பங்கேற்கும் என்று முகமட் கூறினார்.

தற்போது உலகை தாக்கி வரும் வலுவான எல் நினோ இந்த ஆண்டின் மத்தியில் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் துறையின் தலைவர் முகமட் ஹெல்மி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :