ANTARABANGSAECONOMY

கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்கள் டிப்ளோமாவுக்கு மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்

சபாக் பெர்ணம், பிப் 14- கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களாக (எம்.பி.டி.கே.) இனி நியமிக்கப்படுவோர் டிப்ளோமா அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.

மாநகர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர் அரசியல்வாதிகளாக மட்டுமின்றி வல்லுநர்களாகவும் இருக்க வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உத்தரவுக்கேற்ப இந்த நிபந்தனை விதிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநகர் மன்றத்தில் காலியாக உள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும். மாநகர் மன்றத்தில் குறைந்த பட்சம் 50 விழுக்காட்டு வல்லுநர்கள் இருக்க வேண்டும் என்ற துவாங்குவின் (சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்) பரிந்துரையை நிறைவு செய்ய முயல்கிறோம் என்றார் அவர்.

சிறப்புத் தகுதி உள்ளவர்களைக் கொண்டு இந்த ஆண்டை நிறைவு செய்ய நாங்கள் விரும்புகிறோம். இப்போது நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளவர்களில் பலர் நிபுணர்கள் என அழைக்கும் அளவுக்கு தாங்கள் சார்ந்த துறைகளில் சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள சபாக் பெர்ணம் மற்றும் கோல சிலாங்கூர் கடலோரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு குறைந்த பட்சம் டிப்ளோமா அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டுள்ள 15 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமிருடின் முன்னதாக கூறியிருந்தார்.

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர் அரசியல்வாதிகளாக மட்டுமின்றி குறைந்தது 50 விழுக்காட்டினர்  பல்வேறு துறைகளில் திறன் பெற்ற வல்லுநர்களாகவும் இருப்பது அவசியம் என்று கிள்ளானை மாநகராகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது மேன்மை தங்கிய சுல்தான் அறிவுறுத்தியிருந்தார்.

கிள்ளான் மாநகரில் வசிக்கும் அனைத்து இன மக்களையும் பிரதிநிதிக்கும் வகையில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் நியமனம் இன விகிதாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்திருப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :