NATIONAL

வெ.47,000 இணைய மோசடி- வங்கிக் கணக்கை வழங்கிய இருவர் கைது

பாலிக் பூலாவ், பிப் 15 – பல்வேறு வழிகளில் இணைய மோசடிகளில்
ஈடுபட்டு வரும் கும்பலிடம் தங்களின் வங்கிக் கணக்கு விபரங்களை
வழங்கும் பணக் கழுதைகளாகச் செயல்பட்டதன் மூலம் இருவர் 46,953
வெள்ளியை இழப்பதற்கு காரணமாக இருந்தது தொடர்பில் ஆண் மற்றும்
பெண்மணியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இரு பண மோசடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு
உதவுவதற்காக 23 வயதுடைய அவ்விருவரும் பாடாங் செராய் மற்றும்
சுங்கை பட்டாணியில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகப்
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள்
ரிஸால் ஜெனால் கூறினார்.

பகுதி நேர வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாக கூறிய 22 வயது
மாணவியை ஏமாற்றிய கும்பலிடம் தனது வங்கிக் கணக்கு விபரங்களை
ஒப்படைத்தன் மூலம் பணக் கழுதையாக மாறியது தொடர்பான
விசாரணைக்கு உதவும் பொருட்டு அப்பெண் கைது செய்யப்பட்டதாக
அவர் சொன்னார்.

இணையம் வாயிலாகப் பகுதி நேரமாக வேலை செய்யும் ஆர்வத்தில்
இணைப்பை சொடுக்கிய அந்த மாணவி இருபது பணப்பரிவர்த்தனைகள்
மூலம் 31,483 வெள்ளியை இழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடன் பெறுவதற்காகக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது வங்கி
ஏ.டி.எம். கார்டை இணையம் வழி அப்பெண் குறிப்பிட்டத் தரப்பினருக்கு
அனுப்பியது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்
அவர்.

இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் 25 வயது பொறியாளர் ஒருவர் தனது
சேமிப்பு பணத்தை இழப்பதற்கு காரணமாக இருந்தது தொடர்பில் அந்த
ஆண் சந்தேகப் பேர்வழியை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாகக் கமாருள்
ரிஸால் தெரிவித்தார்.

பெரும் தொகையை லாபமாக ஈட்ட முடியும் என ஆசை வார்த்தை
காட்டப்பட்டதை நம்பி அந்த இளைஞர் 15,470 வெள்ளியை அந்த மோசடிக்
கும்பலிடம் இழந்ததாக அவர் மேலும் சொன்னார்.

வாடகைக்கு விடும் நோக்கில் தனது ஏ.டி.எம்.கார்டை அந்த ஆடவர்
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இணையம் வழி அறிமுகமான ஆடவருக்கு
அனுப்பியதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :