ஜோகூர் பாரு, பிப் 17- காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு 573 கோடி வெள்ளியை அனுகூல நிதியாக சொச்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் கடந்தாண்டு வழங்கியதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இதே நோக்கத்திற்காக 510 கோடி வெள்ளி வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், சொக்சோவின் ஒட்டுமொத்த நிதி நிலைமை கடந்த 1971ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன் முறையாக கடந்தாண்டு சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்தது என்றார்.
இந்த வெற்றி சொக்சோவின் கடந்தாண்டின் அடைவு நிலைக்கும் பங்காற்றியுள்ளது. இதன் வழி அனைத்து அம்சங்களிலும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் நேர்மறையான வளர்ச்சி பதிவாகியுள்ளது என்று அவர் சொன்னார்.
பங்களிப்பு மற்றும் அமலாக்கம் வாயிலாக வருமானம் அதிகரித்து 14 விழுக்காடு நேர்மைறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே சமயம் முதலீடுகள் வாயிலாக கிடைத்த வருமானம் 27 விழுக்காடாக உயர்வு கண்டு முதலீடு மீதான வருமானம் (ஆர்.ஒ.ஐ.) ஆறு விழுக்காடாக ஆகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சீனப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று இங்கு நடைபெற்ற செசுமா மடாணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
சிறப்பான நிதி செயல்திறன் மற்றும் ஆக்ககரமான நிதி வாய்ப்பு ஆகியவை சேவைகளை விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்பினை சொக்சோவுக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் 40 தனித்து வாழும் தாய்மார்கள், 90 ஆதரவற்றோர், 15 அனுகூலப் பெறுநர்கள் 164,696 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான உதவிகளைப் பெற்றனர்.