NATIONAL

பங்குகளை வாங்குவதில் போலி பிரதிநிதித்துவம்- வேலையில்லா நபர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், பிப் 20 – பத்தாண்டுகளுக்கு முன்பு முதலீட்டுத் திட்டத்தில் பங்குகளை வாங்குவது தொடர்பில் பொய்யான பிரதிநிதித்துவம் செய்ததாக வேலையில்லாத  ஒருவருக்கு எதிராக இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இண்டஸ்ட்ரானிக்ஸ் பெர்ஹாட், எம் என்.சி. வயர்லெஸ் பெர்ஹாட், விஸ்டைனமிக்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் சொல்யூஷன் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் வாயிலாக  ஒரு வருடத்திற்குள் 10 விழுக்காடு வருமானத்தை ஈட்டித் தருவதாக உறுதியளித்து 44  இங் சின் வேய் என்பவருக்கு  எதிராக மோசடி செய்ததாக சுவா ஹோக் ஹெங் (வயது 44)  குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு  மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு  இடையில்  பெட்டாலிங் ஜெயா, எஸ்.எஸ்.2 இல் உள்ள ஒரு உணவகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என  நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரையிலான  சிறைத்தண்டனை மற்றும் 10 லட்சம் வெள்ளிக்கும்  குறையாத அபராதம் விதிக்க வகை செய்யும்   2007ஆம் ஆண்டு மூலதன சந்தைகள் மற்றும் சேவைகள்  சட்டத்தின்  (சட்டம் 671) 179(பி) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும்
182 வது பிரிவு ஆகியவற்றின்  கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை  இரு நபர் உத்தரவாதத்துடன்
250,000  வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும் கூடுதல் நிபந்தனைகளாக அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும்  பங்குச் சந்தை ஆணைய வழக்கறிஞர் முகமட் ஏரி ரஹ்மான் பரிந்துரைத்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கைருல் அமீன் அப்துல்லா, தனது கட்சிக்காரர்  திவாலானவர் என்பதோடு  வேலையில்லையின்றியும் உள்ளதால்  அவரை குறைந்த ஜாமீனில் விடுவிக்கும்படி மனு செய்தார்.

கூடுதல் நிபந்தனைகளுடன் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 50,000 வெள்ளி ஜாமீனில் அவரை விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி  டத்தின் சபரியா ஓத்மான் இவ்வழக்கு விசாரணையை  மார்ச் 21ஆம் தேதிக்கு நிர்ணயித்தார்.


Pengarang :