NATIONAL

மேலவைத் தலைவராக நியமிக்கப்பட்ட முத்தாங் தகாலுக்குப் பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், பிப்.20 – மேலவையின் (டேவான் நெகாரா) 20வது சபாநாயகராகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ முத்தாங் தகாலுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

புக்கிட் மாஸ் தொகுதியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரான அவர்,  திறமைக்கு ஏற்றவாறு தனது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார் எனத் தாம் நம்புவதாக தனது முகநூல்  பதிவில் அன்வார் கூறினார்.

சரவாக்கின் லாவாஸ் பகுதியைச் சேர்ந்த முத்தாங்   லுன் பாவாங் சிறுபான்மை  இனக்குழுவிலிருந்து  செனட் சபையின் முதலாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்  என்று அவர் வர்ணித்தார்.

நாடாளுமன்றத்தில் ஒராங் உலு உட்பட அனைத்துப் பிரிவினரின் குரல்கள், கருத்துகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை அங்கீகரித்து உறுதிசெய்யும் மடாணி அரசாங்கத்தின் தொடர்ச்சியான கடப்பாட்டை இந்த நியமனம் நிரூபிக்கிறது  என்று அவர் கூறினார்.

மேலவைத் தலைவரான  டான் ஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கடந்த ஜனவரி மாதம்  26ஆம் தேதி சரவாக்கின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து  முத்தாங் அப்பதவிக்கு நியமனம் பெற்றார்.

நேற்று நடைபெற்ற 15வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது தவணைக்கான சிறப்பு மேலவை அமர்வின் போது அன்வார் முத்தாங்கின் பெயரை ஒரே வேட்பாளராக முன்மொழிந்தார்.

69 வயதான முத்தாங் 1982 முதல் 1990 வரை புக்கிட் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்தார். கார்ட்டின் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் அவர்  முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.


Pengarang :