அம்பாங் ஜெயா, பிப் 25- கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி சமூக சேவை மையத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள மெலாவத்தி மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பு நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வானது கோம்பாக் தொகுதியிலுள்ள சீன சமூகத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவதை மட்டுமின்றி இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதன் மூலம் மலேசியா மடாணி உணர்வுக்கு மேலும் புத்தெழுச்சியை ஏற்படுத்துவதையும் இந்த நிகழ்வு நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமானதாக விளங்கும் இந்த நல்லிணக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்துவேன் என்று வளர்ச்சியடைந்த மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றும் மாநிலத்தின் பொறுப்புமிக்கத் தலைவர் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் உலு கிளாங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளியும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமிருடின், மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மூன்று மாநிலங்களில சிலாங்கூரும் ஒன்றாக விளங்குவதாக குறிப்பிட்டார்.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் 99.6 விழுக்காட்டு திட்டங்களை சிலாங்கூர் பூர்த்தி செய்துள்ளதோடு இந்த சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த மூன்று மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது என்றார் அவர்.
நாடு மற்றும் மாநிலம் மறுபடியும் மீட்சி பெறுவதற்கான நேர்மறையான அறிகுறியாக இந்த அடைவு நிலையை நான் பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.