NATIONAL

கோல லங்காட்டில் இரு வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு வெ.3.38 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 28- கோல லங்காட் வட்டாரத்தில் வடிகால் மற்றும் நீர்
பாசனத்துறையின் வாயிலாக இரு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை
(ஆர்.டி.பி.) மேற்கொள்ள மாநில அரச 3 கோடியே 38 லட்சம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளது.

மொத்தம் 1 கோடியே 88 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய சுங்கை
சிஜங்காங் வெள்ளத் தடுப்புத் திட்டம் கடந்தாண்டு மே மாதம்
தொடங்கப்பட்டதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவது, தரம் உயர்த்துவது, மற்றும் குப்பைக
தடுப்புப் பொறிகளை அமைப்பது ஆகியவை அத்திட்டப் பணிகளில்
அடங்கும் என்று மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அவர்
தெரிவித்தார்.

ஒரு கோடியே ஐம்பது லட்சம் வெள்ளி மதிப்பிலான பந்திங் ஆற்றை
உள்ளடக்கிய வெள்ளத் தடுப்புத் திட்டம் கடந்தாண்டு மே மாதம்
தொடங்கப்பட்ட வேளையில் அந்த ஆற்றில் யு-ட்ரெய்ன் எனப்படும்
சிமெண்ட் கல்வெட் நிர்மாணிப்பை அது உள்ளடக்கியுள்ளது என்று அவர்
சொன்னார்.

இவ்விரு திட்டங்களும் இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை 13
விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளன. இத்திட்டங்கள் எதிர்வரும் ஆகஸ்டு முதல்
நவம்பர் மாதத்திற்குள் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தெலுக் பங்கிளமா காராங், ஜாலான் பெராப்பிட்டில் வடிகால் முறையை
மேம்படுத்தும் திட்டம் குறித்து கருத்துரைத்த இஷாம், 55 லட்சம் வெள்ளி
செலவிலான இத்திட்டம் வரும் 2025ஆம் ஆண்டில் முற்றுப் பெறும்
என்றார்.


Pengarang :