NATIONAL

கவனம் !- ஹாடி அவாங்கிற்குச் சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

ஷா ஆலம், பிப் 29 – மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில்
கடுமையான கருத்தினை வெளியிட்ட டான்ஸ்ரீ அப்துல் ஹாடி
அவாங்கிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடுமையான அறிக்கையை
வெளியிட்டுள்ள மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், ‘உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை‘
எனவும் பாஸ் கட்சியின் தலைவருமான அவரை எச்சரித்துள்ளார்.

மேன்மை தங்கிய சுல்தானின் தனிச் செயலாளர் டத்தோ முகமது முனிர்
பானி வெளியிட்ட பிப்ரவரி 27ஆம் தேதியிட்ட அக்கடிதம் சிலாங்கூர் அரச
அலுவலகத்தின் பேஸ்புக்கில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.
சிலாங்கூர் மாநில பாஸ் கட்சித் தலைவர் டத்தோ அப்துல் ஹலிம்
தாமுரியின் பெயருக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

மலாய் ஆட்சியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற
உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்  மீது அதிக
அக்கறை கொள்ளாமல் மறுமை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று
கடத்ந 20ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில்
சுல்தான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக முனிர் அந்த கடிதத்தில்
கூறியுள்ளார்.

அண்மையில் கூட்டரசு நீதிமன்றம் கிளந்தான் மாநிலத்தின் சில ஷரியா
சட்டங்களை ரத்து செய்தது தொடர்பில் ஹாடி அவாங் இந்த கருத்தை
வெளியிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஹாடியின் அந்த அறிக்கை மிகவும் பொருத்தமற்றது என்பதோடு மலாய்
ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது மரியாதையைக்
கடைபிடிக்கும் மலாய் கலாசாரத்திலிருந்து விலகி நாகரீகமற்ற
முறையிலும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தை
வரையறுக்க நீதிபதிகள் தவறிவிட்டனர் என்ற ஹாடியின்
விமர்சனத்தையும் சுல்தான் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர்
சொன்னார்.

இந்த கருத்துகளும் விமர்சனங்களும் சமூகத்தைக் குறிப்பாக முஸ்லீம்களை
குழப்பத்திற்குள்ளாக்கும். இந்த அறிக்கை மலாய்க்காரர்கள் மத்தியில்
கவலையை ஏற்படுத்தி இறுதியில் பிளவை உண்டாக்கும் என அவர்
குறிப்பிட்டார்.

பள்ளிவாசல்களில் அரசியல்வாதிகள் உரை நிகழ்த்த திரங்கானு மந்திரி
பெசார் சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின் பிறப்பித்த உத்தரவு குறித்து
கேள்வியெழுப்பியது உள்பட ஆட்சியாளர்களுக்குச் சவால் விடும் வகையில்
பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஹாடி அவாங்கின் கடந்த கால
நடவடிக்கைகளையும் சுல்தான் சுட்டிக்காட்டினார்.


Pengarang :