NATIONAL

ஊழலில் ஈடுப்படும் அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்- பிரதமர் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 29- ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனது
அமைச்சரவை உறுப்பினர்கள் அமைச்சர் பதவியிலிருந்து
நீக்கப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
எச்சரித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கும்படி ஊழல் தடுப்பு ஆணையத்திற்குத் (எம்.ஏ.சி.சி.) தாம்
உத்தரவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நான் ஓராண்டிற்கும் மேல் பதவியில் இருக்கிறேன். அமைச்சர்கள் அல்லது
பிரதமர் சம்பந்தப்பட்ட ஊழல் புகார்கள் யாரிடமும் இருந்தால் தக்க
ஆதாரங்களுடன் முன்வருமாறு நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு
வெளியிலும் தொடர்நது கோரிக்கை விடுத்து வருகிறேன்.

ஏதேனும் புகார்கள் இருந்தால் நாங்கள் விசாரணை நடத்தி சட்டப்படி
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். ஆனால், அத்தகைய
புகார்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சுத்தமான மற்றும்
ஊழலிலிருந்து விடுபட்ட அரசாங்கம் என்றத் தோற்றத்தை நிலை நிறுத்த
உதவிய எனது நண்பர்களை (அமைச்சர்கள்) நான் வணங்குகிறேன் என்றார்
அவர்.

இன்று இங்கு 2024ஆம் ஆண்டிற்கான தேசிய ஊழல் தடுப்பு உச்சநிலை
மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு
கூறினார்.

டெண்டர்கள் மற்றும் அதன் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகளை
எம்.ஏ.சி.சி. அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு அதன் விசாரணை
வளையத்திலிருந்து எந்த அமைச்சரும் விடுபடுவதில்லை என்றார் அவர்.
அவர்கள் (எம்.ஏ.சி.சி.) என்னிடம் கேட்டால், தாராளமாகச் சென்று
நடவடிக்கை எடுங்கள் எனக் கூறிவிடுவேன். சம்பந்தப்பட்ட அமைச்சரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார். இதுவே நாட்டைக் காப்பதற்கான
சிறந்த வழியாகும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களின் பணத்தைப் பாதுகாத்து அதனை அவர்களின் பரஸ்பர
நலனுக்காகத் திருப்பிக் கொடுப்பதே முக்கியமானதாகும் எனவும் அவர்
கூறினார்.

ஊழலுக்கு எதிராகப் போராடுவது எம்.ஏ.சி.சி.யின் வேலை மட்டும் அல்ல.
ஊழல் புகார்கள் குறித்து கேள்விப்பட்டால் உடனே புகார் செய்யுங்கள்.
ஆனால் பொய்ப்புகார்கள் செய்யாதீர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :