ANTARABANGSAMEDIA STATEMENT

உதவிக்காக  காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்- மலேசியா கடும் கண்டனம்

புத்ராஜெயா, மார்ச் 2-  காஸாவில் உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை  நடத்திய தாக்குதலுக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வட காஸா பகுதியில் உள்ள நபுல்சியில், தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தேவையான அடிப்படை  உதவியை எதிர்பார்த்து காத்திருந்த  ஆதரவற்ற பாலஸ்தீனர்கள் கும்பலாகப் படுகொலை செய்யப்பட்டதற்கு மலேசிய அரசாங்கம் வருந்துவதாக இன்று வெளியுறவு   அமைச்சு (விஸ்மா புத்ரா) வெளியிட்ட அறிக்கை கூறியது .

பெண்கள் மற்றும் சிறுவர்கள்  உட்பட பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலை    மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.

இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக  அனைத்துலக  நீதிமன்றம் (ஐ.ஜே.சி.) கடந்த ஜனவரி 26 ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு  மற்றும் 1948 இனப்படுகொலை மாநாட்டின் விதிகளையும்  அப்பட்டமாக மீறும் வகையில் அமைந்துள்ளது அது தெரிவித்தது.

அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி காஸாவில் உள்ளவர்களுக்கு  வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நிரந்தர போர் நிறுத்தம் அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று மலேசியா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

அட்டூழியங்களை நிறுத்தவும் அனைத்துலகச்  சட்டங்களுக்கு இணங்க நடக்கவும் இஸ்ரேலை அனைத்துலக நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

மோசமடைந்து வரும் சூழ்நிலையில், அதிக உயிரிழப்புகளை தடுக்கும் வகையில்  அனைத்துலக சமூகம் அதன் மனிதாபிமான அடிப்படையிலும் நெறிமுறை மற்றும் சட்ட பூர்வமாகவும் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என்று மலேசியா நம்புகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெருசலமைத் தலைநகராகக் கொண்ட 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில், பாலஸ்தீன மக்கள் தங்களின் சொந்த சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட அரசுக்கு உரிமையுடையவர்கள் என்ற நிலைப்பாட்டில் மலேசியா உறுதியாக உள்ளது என அது மேலும் கூறியது.

இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் மீண்டும் உலகளாவிய நிலையில் சீற்றத்தையும் கண்டனத்தையும்  ஏற்படுத்தியுள்ளதாக  பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா  வெள்ளிக்கிழமை தெரிவித்தது.


Pengarang :