SAINS & INOVASI

தென் சிலாங்கூர் மேம்பாட்டுப் பெருந்திட்டம் ஓரிரு மாதங்களில் தயாராகும்

ஷா ஆலம், மார்ச் 4- தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப்
பகுதிக்கான (இட்ரிஸ்) புளுபிரிண்ட் எனப்படும் கட்டமைப்பு
பெருந்திட்டத்தை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங்
ஸி ஹான் கூறினார்.

சாலைகள், மின்சாரம், பைபர் ஆப்டிக் எனப்படும் நார்இழை மற்றும் குடிநீர்
குழாய் ஆகிய அடிப்படை வசதிகளை பதிக்கும் இடங்கள் மற்றும்
பராமரிப்பு ஆகியவற்றை இந்த உத்தேச பெருந்திட்டம்
உள்ளடக்கியிருக்கும் என்று அவர் சொன்னார்.

எதிர்காலத்தில் அப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும்
போது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்த பெருந்திட்டம் ஒரு
வழிகாட்டியாக விளங்கும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர்
தெரிவித்தார்.

இந்த உத்தேச இட்ரிஸ் திட்டத்தினால் உள்ளுர் மக்களுக்கு ஏற்படக்கூடிய
தாக்கங்கள் குறித்து சிஜங்காங் தொகுதி உறுப்பினர் டத்தோ டாக்டர்
யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

மோசமான சாலை ஒருங்கமைப்பு மற்றும் பராமரிப்பு போன்றவை
எதிர்கால மேம்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யூனுஸ் கூறினார்.

பொது மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவது முக்கியமனதாகும் எனக்
கூறிய இங், இட்ரிஸ் திட்டம் தொடர்பான விழிப்புணர்வையும் அதன்
தாக்கங்களையும் பொது மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஏதுவாக சந்திப்பு
நிகழ்வுகளை நடத்துவதற்கான கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது
என்று சொன்னார்.

தற்போது பல்வேறு சந்திப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கோல லங்காட மற்றும் சிப்பாங் மாவட்ட மக்களுக்குக் கேரித்
தீவு மேம்பாட்டு பெருந்திட்ட தயார் நிலை மற்றும் இட்ரிஸ் மேம்பாட்டுத்
திட்டம் தொடர்பில் விளக்கமளிப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன என்று
அவர் குறிப்பிட்டார்.


Pengarang :