MEDIA STATEMENTNATIONAL

பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கெஅடிலான் தகவல் பிரிவு இன்று தொடங்கி நாடு தழுவியப் பயணம்

ஷா ஆலம், மார்ச் 10- அடுத்த பொதுத் தேர்தல் மற்றும் சபா, சரவா மாநிலத் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு நாடு தழுவிய பயணத்தை  இன்று தொடங்கி மேற்கொள்ளவுள்ளது.

இந்த பயணத் தொடரில் இடம் பெறும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாகக் கூறிய கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் இதர மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் மக்கள் பிரச்சனைகளைத் தெளிவுபடுத்துவது ஆகிய நோக்கங்களில் அடிப்படையில் இந்த பயணத் தொடர் மேற்கொள்ளப் படுவதாக சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் குறிப்பிட்டார்.

இந்த பயணத் தொடர் கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்குழு உறுப்பினர்களை உள்ளடக்கியிருக்கும். எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடிக் கொடுப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு நடப்பு நிலவரங்கள் தொடர்பில் முறையான பயிற்சிகள் வழங்கப்படும் என்றார் அவர்.

இந்த பயணத் தொடரை மேற்பார்வையிடும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளேன். இது குறித்து குறிப்பாக, நடப்பு நிலவரங்கள் தொடர்பில் கட்சியின் தொடர்புப் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சிலுடன் விவாதிக்கவிருக்கிறேன். நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று அடிமட்டத் தொண்டர்களிடம் நடப்பு நிலவரங்கள் குறித்து எடுத்துரைப்போம் என்று அவர் தெரிவித்தார்.

எல்லா கேள்விகளுக்கும் அமைச்சர்களும் தலைமைத்துவமும் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அனைத்து விஷயங்களையும் அறிந்த வலுவான மற்றும் முறையாக பயிற்சியளிக்கப்பட்ட குழுவை நாம் கொண்டிருப்பது அவசியம் என்று கெஅடிலான் தகவல் பிரிவு மாநாட்டைத் முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறினார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாம் பொதுத் தேர்தலை எதிர் கொள்ளவிருக்கிறோம். 2027 பொதுத் தேர்தலுக்கு முன்பாக சபா, சரவா மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

எழுச்சி பெற்று உணர்ந்து கொள்ளுங்கள். நமது ஆற்றலை ஒன்றிணைப்போம். நமது எதிரே உள்ள பிரச்சனை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் பாதகமில்லை. நாம் இப்போது சிறப்பான இடத்தில் இருக்கிறோம். ஆகவே, சிறப்பானவற்றை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :