ANTARABANGSAMEDIA STATEMENT

காஸாவில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25ஆக உயர்வு

காஸா நகர், மார்ச் 10- காஸா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் விளைவாக உடலில் போதுமான ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து இல்லாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 பேராக உயர்ந்துள்ளது.

இந்த குறைபாடு காரணமாக ஆக சமீபத்தில் ஓரு குழந்தை உள்ளிட்ட இரு மரணச் சம்பவங்கள் பதிவானதாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு கூறியது.

ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறையினால் இரண்டு மாதப் பெண் குழந்தை வட காஸாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையில் உயிரிழந்த வேளையில் இருபது வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர் அல்-ஷிபா மருத்துவமனையில்  காலமானார் என்று அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஊட்டச் சத்து மற்றும் நீர் சத்து குறைவுடன் தொடர்பில் வெளியிடப்படும் மரண எண்ணிக்கை மருத்துவமனைகளுக்கு வருவோரை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளன என்ற அது தெரிவித்தது.

ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து இன்மையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதோடு வட காஸாவில் பஞ்சம் மிக அபாயகரமான நிலையை எட்டியுள்ளதை பிரதிபலிக்கும் வகையிலும் உள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதல்களில் இதுவரை பெண்கள் சிறார்கள் உள்பட 30,960 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 72,524 பேர் காயமடைந்துள்ளனர்.


Pengarang :