பாலிக் பூலாவ், மார்ச் 15: வாகன என்ஜின் எண்ணெய் முதலீட்டு மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 240,000 ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

நிறுவனம் ஒன்றின் பொது மேலாளராகப் பணிபுரியும் 24 வயது பெண் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, 51 வயதான தொழிலதிபர் பயான் லெபாஸில் கைது செய்யப்பட்டதாக தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் கமருல் ரிசல் ஜெனால் தெரிவித்தார்.

சந்தேக நபரின் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக வளர்ப்புத் தந்தையால் அப்பெண் சந்தேக நபருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். மேலும் அவர் RM240,000 பணத்தை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டார், ஏனெனில் ஒரு மாதத்திற்கு RM50,000 லாபம் தருவதாக சந்தேக நபர் உறுதியளித்தார்.

இருப்பினும், கடந்த ஜூன் மாதம் முதலீடு செய்ததிலிருந்து 1,000 ரிங்கிட் மட்டுமே பெற்றதால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகவும், பின்னர் அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் கமருல் ரிசல் கூறினார்.

“அந்நபர் மார்ச் 17 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டார் மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

திட்ட ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை பிரச்சனையால் அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாததால் பாதிக்கப்பட்டவர் முதலீடு செய்த பணத்தை சந்தேக நபர் புதிய திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

– பெர்னாமா