ALAM SEKITAR & CUACANATIONAL

இக்வினோக்ஸ் நிகழ்வினால் நாட்டின் வானிலையில் அதிக மாற்றம் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 21- ஆண்டுக்கு  இரு தினங்களுக்கு நிகழும் இக்வினோக்ஸ் நிகழ்வினால்  மலேசியாவின் வானிலையில்  குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர்  (நடவடிக்கை) முகமது ஹிஷாம் முகமது அனிப் தெரிவித்தார்.

ஏனென்றால், மலேசியா போன்ற  பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளில்  பொதுவாகவே  பகல் மற்றும் இரவு நேரங்களின் அளவு ஆண்டு முழுவதும் சமமாகவே உள்ளது என்று அவர் சொன்னார்.

இக்வினோக்ஸ் எனப்படும் இரவும் பகலும் சம அளவிலான நேரத்தைக் கொண்டிருக்கும் நிகழ்வு ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது  மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 22 ஆகிய தேதிகளில் நிகழ்கிறது.

தற்செயலாக நிகழும் காரணத்தால் மலேசியாவின் வெப்பமான வானிலை பெரும்பாலும் இக்வினோக்ஸ் நிகழ்வுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது.  இருப்பினும், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள வெப்பமண்டல நாடுகளுக்கு இந்த நிகழ்வினால்   குறிப்பிடத்தக்க தாக்கம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தராயணம் எனப்படும் இந்த இக்வினோக்ஸ் நிகழ்வின் போது போது வெப்ப நிலையின் வேறுபாடு 0.1 முதல் 0.2 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்று அவர்  பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

உத்தராயணம் என்பது சூரியன் பூமத்திய ரேகைக்கு நேரடியாக மேலே இருக்கும்போது ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும். இதனால் உலகம் முழுவதும்  பகல் மற்றும் இரவு நேரங்கள் சமமான அளவு அதாவது 12 மணி நேரமாக இருக்கும்.


Pengarang :