SELANGOR

நோன்புப் பெருநாளை முன்னிட்டு கார் நிறுத்த அபராதம் 15.00 வெள்ளியாகக் குறைப்பு- எம்.பி.டி.கே. அறிவிப்பு

ஷா ஆலம், மார்ச் 26 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல்
முதல் தேதி தொடங்கி ஒரு மாத காலத்திற்கு கார் நிறுத்த
குற்றங்களுக்கான அபாரதத் தொகையை 15.00 வெள்ளியாகக் கிள்ளான் அரச
மாநகர் மன்றம் (எம்.டி.டி.கே.) குறைத்துள்ளது.

இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அபராதத் தொகையைச்
செலுத்துவதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்பட கடுமையான
தண்டனைகளை எதிர்கொள்வதைத் தவிர்க்கும்படி பொது மக்களை டத்தோ
பண்டார் டத்தின் படுகா நோராய்னி ரோஸ்லான் கேட்டுக் கொண்டார்.

எனினும், சிறப்பு நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்துவது, மாற்றுத்
திறனாளிகளுக்கான கார் நிறுத்துமிடங்களை மறைப்பது, கார்
நிறுத்துமிடங்களுக்கு இடையூறை ஏற்படுத்துவது போன்ற குற்றங்கள் இந்த
அபராதக் கழிவில் உள்ளடங்கவில்லை என்று அவர் சொன்னார்.

இதனிடையே, மைசேவ் ஃபூட் ரமலான் திட்டத்தை அரசு சாரா
அமைப்புகளுடன் இணைந்து மாநகர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் மாதாந்திர
கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் அவர் இதனைக் கூறினார்.

விற்கப்படாத உணவுகள் வீணடிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலான இந்த
திட்டம் எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஐந்து தினங்களுக்கு மாலை
4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஜாலான் ஸ்ரீ சரவாக் ரமலான்
சந்தை, தாமான் அண்டலாஸ் ரமலான் சந்தை ஆகியவற்றில்
மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ரமலான் சந்தைகளில் சேகரிக்கப்படும் இந்த உணவுப் பொருள்கள் ஜாலான்
ஸ்ரீ சரவாக் 19, சூராவ் அன் நுர் மற்றும் பெங்கேல் டாயாவில்
உள்ளவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :