ANTARABANGSA

காஸாவில் உடனடிப் போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்திற்கு ஹமாஸ் வரவேற்பு

அங்காரா, மார்ச் 26 – காஸா பகுதியில் உடனடிப் போர் நிறுத்தத்தை  அமல் செய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பாதுகாப்பு மன்றம் நேற்று  தீர்மானம் நிறைவேற்றியதை ஹமாஸ்  வரவேற்றுள்ளதாக அனடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம்  தெரிவித்தது.

காஸாவிலிருந்து அனைத்து இஸ்ரேலியப் படைகளும் திரும்பப் பெறுவதற்கும்  இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கும் வழிவகுக்கும் நிரந்தரப் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்கிறோம் என்று அந்த அமைப்பு   அறிக்கை ஒன்றில்  கூறியது.

போர் நிறுத்தத்திற்கு கட்டுப்படும் அதேவேளையில்  பாலஸ்தீன மக்களுக்கு எதிரான  இனப்படுகொலைகளையும் இன அழிப்பையும் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும்படி ஐ.நா. பாதுகாப்பு மன்றத்திற்கு ஹமாஸ் கோரிக்கை விடுத்தது.

இரு தரப்பிலும் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க வழிவகுக்கும் உடனடி பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபடத் தாங்கள் தயாராக இருப்பதாகவும்  ஹமாஸ் தெரிவித்தது.

எந்தவொரு ஒப்பந்தமும் பாலஸ்தீனர்களின்  நடமாட்ட சுதந்திரத்திற்கு வழி வகுப்பதாகவும், காஸாவில் வசிப்பவர்களுக்கு அனைத்து  மனிதாபிமான தேவைகளும் கிடைப்பதற்குரிய  உத்தரவாதம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அது மேலும் கூறியது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் காஸாவில் போர் நிறுத்தத்தை அமல் செய்யக் கோரி ஐநா பாதுகாப்பு மன்றம் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.

பாதுகாப்பு மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. அதே நேரத்தில் அமெரிக்கா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

எல்லா தரப்பினராலும் மதிக்கப்படும் ரமலான் மாதத்திற்கான உடனடி போர்நிறுத்தம்  நீடித்த நிலையான போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று அந்த  தீர்மானம்  கூறியது.


Pengarang :