பெர்மாத்தாங், கோம்பாக் செத்தியா, சுங்கை ராமாலில் மலிவு விற்பனை நடைபெற்றது

ஷா ஆலம், மார்ச் 30- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் மூன்று  தொகுதிகளில் நடைபெற்றது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வழங்கும் இந்த விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி  கம்போங் ராஜா மூசா (பெர்மாத்தாங்), மேடான் செலேரா வீரா சீஃபூட் (கோம்பாக் செத்தியா), காம்ப்ளெக்ஸ் பி.கே.என்.எஸ். பாங்கி, புட்சால் மைதானம் (சுங்கை ராமால்) ஆகிய இடங்களில் நடைபெற்றது..

இந்த மலிவு விற்பனை நாளை ஞாயிற்றுக்கிழமை பாலாய் ராயா கம்போங் பத்து பிலா (பண்டார் பாரு கிள்ளான்), சூராவ் நுருள் இமான் சுபாங் சூரியா (கோத்தா டாமன்சாரா), தாமான் கெமிலாங் சமூக மண்டபம் (டெங்கில்), பாரிட் 7, பாண் 3 (சிகிஞ்சான்) ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்,  ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் செகி ப்ரெஷ் பேராங்காடிகளில் நடைபெறும் மலிவு விற்பனையுடன் சேர்த்து இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை நடத்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.


Pengarang :