ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிலாங்கூரிலுள்ள  அணைகளில்  நீர் மட்டம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது

ஷா ஆலம், மார்ச் 30 –  தற்போதைய வெப்ப வானிலைக்கு மத்தியிலும்  சிலாங்கூரில் உள்ள ஏழு அணைகளில் நீர்மட்டம்  சீராக உள்ளது.

பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்தும் சீராக உள்ளன.  பெரும்பாலான நீர்த்தேக்கங்கள்  இன்னும் 80 விழுக்காடு  அல்லது அதற்கு மேல்  நீர்க் கொள்ளளவைக் கொண்டுள்ளன. கிள்ளான் கேட்ஸ் அணையில் மட்டும் 70 நீரின் அளவு  சதவீதத்திற்கு மேல் உள்ளது. இருப்பினும்,  நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என அவர் சொன்னார்.

நாங்கள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வெப்ப வானிலை நிலவிய போதிலும் அனைத்தும்  சீராக உள்ளது என்று அவர் சமீபத்தில் சிலாங்கூர் கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தால் (லுவாஸ்) நிர்வகிக்கப்படும் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மைத் தகவல் அமைப்பு இணையதளம் வெளியிட்ட தகவலின்படி நேற்று காலை 8 மணி வரை பத்து அணையின் நீர்மட்டம் 88.17 விழுக்காடாகவும் கிள்ளான் கேட்ஸ் அணையின் நீர் மட்டம் 76.17 விழுக்காடாகவும்  லங்காட் அணையின் நீர்மட்டம்  79.15 விழுக்காடாகவும் இருந்தது.

இதற்கிடையில், செமினி அணையில்  100.18 விழுக்காடாகவும் சுங்கை சிலாங்கூர் அணையில் 89.82  விழுக்காடாகவும் சுங்கை திங்கி அணையில்  94.46 விழுக்காடாகவும் சுபாங் அணையில்  100 விழுக்காடாகவும்  நீர்மட்டம் உள்ளது

தீபகற்ப மலேசியாவில் 29 பகுதிகளும் சபா மற்றும் சரவாக்கில் ஒரு பகுதியும் முதலாம் நிலை வெப்ப அலை எச்சரிக்கையை பதிவு செய்துள்ளதாக நேற்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Pengarang :