SELANGOR

முதலீடுகளை ஈர்க்க வான் போக்குவரத்து, செமிகண்டக்டர் துறைகளில் மாநில அரசு கவனம்

கோல லங்காட், ஏப் 3- மாநிலப் பொருளாதாரத்தை உந்தச் செய்வதற்கு ஏதுவாக சிப்பாங்கில் அனைத்துலக வான் போக்குவரத்து பூங்காவை அமைப்பது உள்பட மூன்று முக்கிய துறைகளில் மாநில அரசு இவ்வாண்டு கவனம் செலுத்தவுள்ளது.

செமிகண்டக்டர் துறைகளில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது தவிர்த்து முதலீட்டை ஈர்ப்பதற்கான வியூகங்களில் ஒரு பகுதியாக நிதி வசதியை ஏற்படுத்தித் தருவது குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டிற்கான இலக்காக வான் போக்குவரத்து பூங்கா திட்டம் விளங்குகிறது. காரணம், இதில் சிறப்பான உத்தரவாத அம்சங்களை நாம் கண்டறிந்துள்ளோம். மத்திய தவணைக்கான ஆய்வின் அடிப்படையில் நிதி வசதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என அவர் குறிப்பிட்டார்.

செமிகண்டக்டர் துறைகளிலும் வாய்ப்புகளை நாம் கண்டறியவிருக்கிறோம். சூழியல் முறையை உயர்த்துவதற்கான ஆற்றலை இத்துறை கொண்டுள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் அதிகமான முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டு வரும். இந்த வாய்ப்பினை சிலாங்கூரும் தவறவிடாது என்றார் அவர்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ள வங்கிகள் உள்பட பல நிதி நிறுவனங்களிடம் நாங்கள் இது குறித்து பேச்சு நடத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் செயலாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கு  நம்முடைய நிதிக்  கையிருப்பை பயன்படுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு என்.சி.டி. விவேக தொழிலியல் பூங்காவின் தொடக்க விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

செமிகண்டக்டர் துறை இவ்வாண்டில் 300 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் எனத் தாங்கள் மதிப்பிடுவதாகவும இதன் மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு பொருத்தமான இடங்களை பூச்சோங், சுபாங் மற்றும் ஷா ஆலமில் அடையாளம் கண்டுள்ளோம். சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :