MEDIA STATEMENTNATIONAL

ஐந்து லட்சம் வெள்ளியைக் கைவிட்டுச் சென்ற நபரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு

ஷா ஆலம், ஏப் 7- பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி 500,000 வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகை அடங்கிய பயணப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் ஆடவர் ஒருவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ரொக்கப் பணம் அடங்கிய அந்த பெட்டியை அங்கு வைத்தவர் சம்பந்தப்பட்ட அந்த நபரே என்பது அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த ஆடவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் பணம் அடங்கிய பெட்டியை விட்டுச் சென்றவர் அந்நபராக இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம் என அவர் சொன்னார்.

இருந்த போதிலும், அப்பணத்தை அவ்வாடவர் அங்கு விட்டுச் சென்றதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று நேற்றிரவு இங்கு நோன்புப் பொருநாள் சாலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவன பணியாளர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். 

எனினும், வாக்குமூலம் வழங்கிய நபர், பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்டப் பணம் தங்களுடையது என முன்னர் கூறிக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் இயக்குநர் அல்ல என்றும் ஹூசேன் தெளிவுபடுத்தினார்.

ஆயினும், அந்த இயக்குநரும் வாக்குமூலம் வழங்கிய நபரும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றும் அவர்  அவர் சொன்னார்.

கைப்பற்றப்பட்ட அந்த பணத்தின் மீது மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் ஏழு நபர்களின் கைரேகைகள் அதில் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், அதன் உண்மையான உரிமையாளரை அடையாளம் காண்பதற்காக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :