MEDIA STATEMENTNATIONAL

போதைப்பொருள் பயன்படுத்திய ஐந்து பஸ் ஓட்டுனர்கள் ஜே.பி.ஜே. சோதனையில் சிக்கினர்

அலோர் ஸ்டார், ஏப் 7- தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேருந்து ஓட்டுநர்களை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அடையாளம் கண்டது.  நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடத்தப்பட்ட ஓப் ஹாரி ராயா 2024 சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது அந்த ஐவரும் அடையாளம் காணப்பட்டனர்.

பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் 30 முதல் 60 வயது வரையிலான அந்த ஐவரும் மெத்தபெத்தமின் போதைப் பொருளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதை ஜே.பி.ஜே. அமலாக்கத் துறையின் மூத்த தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

கிழக்குக் கரை மாநிலத்திற்கு பயணத்தைத் தொடங்கவிருந்த இரு பஸ் ஓட்டுநர்கள் இங்குள்ள (சஹாப் பெர்டானா) பஸ் முனையத்தில் தடுத்து வைக்கப்பட்ட வேளையில் சரவா மற்றும் கோத்தா பாருவில் தலா ஒருவர் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

அறுபது வயதுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும் போதைப் பழக்கத்தைக் கொண்டிருப்பது உண்மையில் வருத்தமளிப்பதாக உள்ளது. பெருநாள் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்துடன் இணைந்து பஸ் ஓட்டுநர்களுக்கு எதிரான சோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாள் சாலை பாதுகாப்பு இயக்கத்தை முன்னிட்டு இங்குள்ள சஹாப் பெர்டானா பஸ் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பஸ் ஓட்டுனர்கள் பயணத்தின் போது கைப்பேசியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான  செயல்களில் ஈடுபடுவதைக் கண்டால் அது குறித்து உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்யுமாறு பயணிகளை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :