MEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாரு இடைத்தேர்தலில் மறைந்த   லீயின் சேவைகள் முன்னிலைப்படுத்தப்படும்- இங் ஸீ ஹான் கூறுகிறார்

ஷா ஆலம், ஏப்ரல் 9 – வரவிருக்கும் கோல குபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய கவனம் அத்தொகுதியின் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் அர்ப்பண உணர்வுடன் கூடிய  பணியை முன்னிலைப்படுத்துவதாக இருக்கும்  தொகுதி தேர்தல் இயக்குநர் இங் ஸீ ஹான் கூறினார்.

வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஜசெக தலைமைத்துவத்திற்கும் பின்னர் ஹராப்பான் மத்திய தலைமைக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சமூகத்திற்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்த  மறைந்த  சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவது
கோல குபு பாருவில் பக்காத்தான் ஹராப்பானின் முதன்மை இலக்காக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஜசெகவின் உணர்வுகளுடனும்  கொள்கைகளுடனும் ஒத்துப் போகக்கூடிய  லீயின் பங்களிப்பு  மற்றும் அணுகுமுறை, அரசியல் பின்னணி மற்றும் சித்தாந்த வேறுபாடின்றி இப்பகுதியில் உள்ள   அனைத்து பிரிவினராலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிலாங்கூரில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் கோல குபு பாரு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய சிலாங்கூர் ஜசெக  உறுதிபூண்டுள்ளது என்று  மாநில ஜசெக செயலாளருமான அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும்  கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கு தம்மீது நம்பிக்கை வைத்து  தேர்தல் இயக்குநராக பொறுப்பு வழங்கிய  சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் ஜசெக தலைமைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப்
பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்


Pengarang :