MEDIA STATEMENTNATIONAL

ஈகை செய்வோம்; மனிதம் காப்போம்! டத்தோ ரமணன் நோன்புப் பெருநாள் வாழ்த்து

ஷா ஆலம், ஏப் 10- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைச் சிந்தனையை  மனத்தில் நிறுத்தி, ஏழை எளியோருக்கு உணவளித்து, அனைவரிடமும் அன்பு பாராட்டி, உற்சாகமாக இந்த நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.

வேற்றுமைகளை களைந்து அனைவரிடமும் சகோதரத்துவம் பேணுகின்ற இஸ்லாமிய பெருமக்களின் மனிதநேயம் போற்றத்தக்கது. அவர்களின் நோன்பு கடமையை உணர்ந்து, அவர்களின் நடவடிக்கைகள் யாவும் சுமூகமாக அமையப்பெற, மற்ற இனத்தவர்களும் விட்டுக் கொடுத்து முழு ஒத்துழைப்பு வழங்கி பொறுமை காக்கும் மனப்பாங்கை காணுகையில், மலேசியர்கள் மனிதம் காத்து உயர்த்திருக்கிறார்கள் என உலக அரங்கில் அறுதியிட்டுச் சொல்ல முடியும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நமது முன்னோர்கள் மூவினத்தாருடன் ஒற்றுமையாக கூட்டாக வாழ்த்து மனிதம் பேணிக் காத்தனர். அவர்களிடையே பகிர்வு, விட்டுக்கொடுப்பு, சுயநலமற்ற வாழ்க்கை முறை,  பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஒருவர் மதித்து, மற்றவருக்கு ஈகை செய்து, உதவி புரிந்து வாழ்ந்தனர்.

அத்தகைய  உயர்ந்த நிலை இன்று எக்காரணத்திலும் தலைகீழாகி விடக்கூடாது. சுயநலம் என்ற நோய், நம்மிடையே பரவி விடக்கூடாது. நாகரீக வளர்ச்சியின் தாக்கம், நம்மிடையே உள்ள மனித நேயத்தை அழித்து விடக்கூடாது.

தேவையில் இருப்போருக்கு தேவையான  நேரத்தில் சரியான உதவியை செய்வதுதான் மனிதம். பணமோ பொருளோ உள்ளவர்கள் இந்த உதவியை செய்யலாம். பணம், பொருள் இல்லாதவர்கள் கூட பல்வேறு வழிகளில் உதவி செய்யலாம்.

இந்த புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமிய பெருமக்களிடையே இந்த உதவும் மனப்பான்மையை அதிகம் காணமுடிகிறது. மற்றவர்களின் துயர் நீக்கி இன்பம் தருகின்ற இஸ்லாமிய அன்பர்களுக்கு, இந்த ஈகைத் திருநாள் அதிகமான மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வர வேண்டும் என பிகேஆர் தேசிய தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

இந்த விழா காலத்தில் அனைவரும் சாலை பாதுகாப்பையும் சுய பாதுக்காப்பையும் கருத்தில் கொண்டு பயணிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :