ECONOMY

கிள்ளான், பந்திங்கில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலம், ஏப் 11- இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கிள்ளான், பந்திங் மற்றும் ராசில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.

பந்திங்கில் காற்றுத் தரக் குறியீடு 158 ஐ.பி.யு.வாகவும் கிள்ளானில் 153ஆகவும் சிராசில் 155ஆகவும் பதிவானதாக சுற்றுச் சூழல் துறையின்  மேற்பார்வையில் உள்ள மலேசிய காற்றுத் தரக்குறியீட்டு மேலாண்மை முறையின் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுழியம் முதல் 50 வரையிலான ஐ.பி.யு. பதிவு ஆரோக்கியமானதாகவும் 51-100 வரையிலான பதிவு மிதமானதாகவும் 101-200 வரையிலான பதிவு ஆரோக்கியமற்றதாகவும் 201-300 வரையிலான பதிவு மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் 300க்கும் மேற்பட்ட பதிவு ஆபத்தானதாவும்  வகைப்படுத்தப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 68 காற்றுத் தரக் குறியீட்டு மையங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஐ.பி.யு. தரவு வெளியிடப்படுகிறது.

இதனிடையே, நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெப்பத் திட்டுகளை சிங்கப்பூரில் உள்ள ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் கண்டறிந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் லத்திப் வான் ஜாபர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

சுமத்திராவில் இரு வெப்பத் திட்டுகளும், கலிமந்தானில் எட்டு வெப்பத் திட்டுகளும் காணப்பட்டன. மலேசியாவைப் பொறுத்த வரை 12 வெப்பத் திட்டுகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 11 பகாங்கிலும் திரங்கானுவில் ஒன்றும் உள்ளன என்றார் அவர்.


Pengarang :