MEDIA STATEMENTNATIONAL

சாலைத் தடுப்பில் தப்பிய லோரியை போலீசார் 50 கிலோ மீட்டர் துரத்திப் பிடித்தனர்

ஜெம்போல், ஏப் 11-  சாலைத் தடுப்பிலிருந்து தப்பிய லோரியை  சுமார்   50 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற  போலீசார் அந்த லோரி மீது 10 முறை துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஓட்டுநரை மடக்கிப் பிடித்தனர்.

இந்த சம்பவம்  பகாவ்- கெமாயான் சாலையின் 9வது கிலோ மீட்டரில்   நேற்று முன்தினம்  இரவு நிகழ்ந்ததாக  ஜெம்போல் மாவட்ட  காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, ​​ 21 வயது சந்தேக நபர் ஓட்டிச் சென்ற லோரி  இரட்டைக் கோடுகள் கொண்ட  சாலையில்  திடீரென திரும்பியதால் 40 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அந்த லோரியுடன் மோதியதாக அவர் சொன்னார்.

ஆபத்தான முறையில்  தொடர்ந்து லோரியைச் செலுத்திய அந்த ஆடவர்  எதிர்த்தடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த  போக்குவரத்து போலீஸ்காரரை இடித்துத் தள்ள முற்பட்டதோடு  பிற வாகனமோட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும்  வகையில் செயல்பட்டதாக என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரின் லோரியை  நிறுத்துவதற்காக அதன்  டயரை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டது என்றார் அவர்.

லோரியின் டயர் சேதமடைந்த நிலையில் தப்பிய அதன் ஓட்டுநரை ரோந்து வாகனத்தின் உதவியுடன்    செம்பனை தோட்டப் பகுதியில் போலீசார் கைது செய்தனர்  என்று அவர் கூறினார்


Pengarang :