ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிரெய்லர் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது- இளைஞர் மரணம், இருவர் காயம்

கோல திரங்கானு, ஏப் 12- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் பதின்ம வயது இளைஞர் உயிரிழந்ததோடு அவரின் தம்பி மற்றும் உறவினர் காயங்களுக்குள்ளாகினர். இந்த விபத்து நேற்று விடியற்காலை 2.30 மணியளவில் கோல திரங்கானு, கம்போங் கெப்போங்கில் நிகழ்ந்தது.

முகமது அலாவுடின் ஷாமுன்னாஹா (வயது 16) என்ற அந்த இளைஞரைப் பலி கொண்ட இவ்விபத்து தொடர்பாக அந்த இளைஞரின் தந்தையிடமிருந்து அதிகாலை 5.44 மணி அளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நோர் கூறினார்.

இந்த விபத்து நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த கிராமத்திலுள்ள குப்பை கொட்டும் பகுதிக்குச் சென்ற கொண்டிருந்ததாக கூறிய அவர், அந்த லோரி கெப்போங் , நீர் சுத்திகரிப்பு மையத்தின் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்றார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெய்லர் லோரியை மோதியது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அந்த நான்காம் படிவ மாணவர் சுல்தானானா நுர் ஷகிரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் எனினும் சிகிச்சைப் பலனின்றி அதிகாலை 4.00 மணியளவில் உயிரிழந்ததாகவும் அவர் சொன்னார்.

இந்த விபத்தில் காயங்களுக்குள்ளான அலாவுடினின் சகோதரர் முகமது ஆடாம் ஹாய் (வயது 14) மற்றும் முகமது அஃபி ஹைக்கால் அப்துல் மாலிக் (வயது 16) ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :